அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவு குறித்து கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படவில்லை என்றால், அந்நாட்டின் மீது குண்டுகளை வீசுவோம். எதிர்காலத்தில் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு முன்பு கண்டிராத தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரானுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடும். எனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்பட வேண்டும். புதிய மற்றும் தெளிவான ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
ஈரான் அதிபரின் கருத்துகள் வெளியான நிலையில் தற்போது டிரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், தனது முதல் பதவிக்காலத்தில் (2017-21), அதாவது 2018ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் போது ஈரானுடன் எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.