நியூயார்க்: ரூ.2,000 கோடி தொடர்பான அதானி லஞ்ச புகார் தொடர்புடைய 3 வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக இந்திய தொழிலபதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், ‘நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராபிஸ் விசாரிப்பார். அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கிழக்கு மாவட்ட நியூயார்க் நீதிமன்றம் 2024 டிசம்பர் 12ல் பிறப்பித்தது. இதையடுத்து டிசம்பர் 18 அன்று, வழக்குகள் அதிகாரப்பூர்வமாக நீதிபதி நிக்கோலஸ் ஜி கராபிசுக்கு மாற்றப்பட்டன. இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.