சென்னை: நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், ஏம்எல்ஏக்கள் பங்கேற்று வருகின்றனர். நெல்லையில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதி கள ஆய்வு கூட்டம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.

எஸ்பி வேலுமணி சொல்லியும் மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள்! தள்ளுமுள்ளான அதிமுக  கள ஆய்வு கூட்டம்!

மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம், முன்னாள் எம்எல்ஏ சிவசாமி ஆகியோர் கள ஆய்வு பணிக்காக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த ஓட்டுகளே வாங்கி உள்ளோம். கடந்த வாரம் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பல வார்டுகளில் அதிமுக நிர்வாகிகள் யாருமே இல்லை என்பதை நான் பார்த்தேன். மாவட்ட செயலாளர் சேலத்திற்கு சென்று விட்டார். அவர், வேறொரு நாளில் சேலத்திற்கு சென்று இருக்கலாம். பூத் கமிட்டிக்கு 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வாக்காளர் சேர்ப்பு முகாமில் யாருமே இல்லாதது வருந்தத்தக்கது என்று பேசினார்.

இவ்வாறு அவர் பேசியதும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அமமுகவிற்கு சென்று வந்தவர்கள் எல்லாம் பேசுவதற்கு அருகதை கிடையாது என்று கூறினர். இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் மோதலை பார்த்து அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சர் வேலுமணி, தகராறு செய்பவர்கள் வெளியே செல்லலாம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கில் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் மாவட்ட செயலாளரை எப்படி குறைத்து பேசலாம் என்று தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து முன்னாள் எம்பி முத்துகருப்பன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் நிர்வாகிகளை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்தது. மாஜி அமைச்சர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்காங்கண்ணி சாலையில் உள்ள மண்டபத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் முன்னாள் அரசு கொறாடா மனோகரன் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காலை 11 மணிக்கு திண்டுக்கல் சீனிவாசன் பேச ஆரம்பித்தார். திண்டுக்கல் சீனிவாசன் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்த போது கூட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அம்பிகாபதி, ‘மேடையில் தலைவர்கள் மட்டுமே பேசக்கூடாது, நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைகளை யாரும் இங்கு கேட்டு நிவர்த்தி செய்வதில்லை. முதலில் உறுப்பினர்களை மேடையில் பேச விட்டு அதன் பின்னர் குறைகளை கேளுங்கள்’ எனக்கூறியதோடு ஆக்ரோஷமாக மேடையில் ஏறி மைக்கை பிடித்து பேச முயன்றார்.

அப்போது மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், அமைதியாக இருங்கள் என அவரை கூறியதோடு, மேடையை விட்டு கீழே தள்ளி அங்கிருந்து அம்பிகாபதியை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்களிடம் அம்பிகாபதி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேடையில் இருந்தவர்கள் அவரை தடுத்து கீழே தள்ள முயன்ற போது அவர்களிடையே பயரங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும், முதலில் எங்களது குறைகளை கூறுவதற்கு மேடையில் அனுமதிக்க வேண்டும் என கூறி அம்பிகாபதிக்கு ஆதரவாக பயங்கரமாக கூச்சலிட்டனர். இதனால் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாஜ எம்எல்ஏ நயினாருடன் எஸ்பி வேலுமணி திடீர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக கள ஆய்வு ஆய்வுக் கூட்டத்திற்காக நெல்லை வந்திருந்தார். கூட்டம் முடிந்த பின்னர் பாஜ சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் பெருமாள்புரம் இல்லத்திற்கு சென்ற வேலுமணி அவரது இல்ல திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். இருவர்கள் சந்திப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் உடனே வைரலானது. நயினார் நாகேந்திரன் முன்பு அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜவில் இணைந்து விட்டார். அதிமுக – பாஜ இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணி உறவும் முறிந்து போனது. இந்நிலையில் அதிமுக – பாஜ எதிர் எதிர் முகாம்களில் உள்ள இரண்டு மாஜி அமைச்சர்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்: சாபம் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்
தஞ்சையில் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, ‘கூட்டணி கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். (பத்திரிக்கையாளர்களை பார்த்து எங்களை மாட்டிவிடாதீர்கள் என்று சிரித்துக்கொண்டே பேசினார்) கடந்த தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும். தெரியுமா? தெரியாதா? நமக்கு எதிராகதானே ஓட்டு போட்டாங்க. நான் திண்டுக்கலில இப்போ எம்எல்ஏ. 22 ஆயிரம் ஓட்டுல வெற்றின்னு சொன்னாங்க. சரி கையெழுத்து போட உட்காந்து இருக்கேன்.

கலெக்டரு எல்லாம் இருக்காங்க.. துணை தாசில்தார் ஓடி வந்து ஐயா..ஐயா…தபால் ஓட்டு எண்ணிட்டு இருக்கோம்.. கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீங்க.. சரி வரட்டும் ஒரு 1000 ஓட்டு கிடைக்கும்னு உட்காந்து இருக்கேன்… 5000 ஆயிரம் ஓட்டு குறைந்துடுச்சுனு சொன்னாரு… என்னய்யானா திமுகவுக்கு தபால் ஓட்டு எல்லாம் போய்டுச்சு… உங்களுக்கு 5000 ஆயிரத்தை குறைச்சு 17,500ல நீங்க ஜெயிச்சிங்கனு சொன்னாங்க.. அதையாவது கொடுங்கடா அப்பா… ஜெயிச்சிட்டேன்ல… போதும்டா அப்பா… அப்படினு தாய்மார்கள் பிரசவம் இருந்து குழந்தைய பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்ல அந்த மாதிரி மகிழ்ச்சி அடைந்து விட்டேன். எதுக்கு சொல்றேன்னா..

என் ஒரு தொகுதியில 5000 ஆயிரம் ஓட்டு.. அத்தென்ன ஓட்டும் அவங்களுக்குதான். எங்களுக்கு எத்தனைதான்யா வந்திருக்குனு கேட்டா, ஒன்னு கூட உங்களுக்கு வரலனு சொன்னாங்க… எவ்வளோ தெளிவா இருக்காங்க பாரு.. அட கொலைகாரப் பாவிகளானு சொல்லிட்டு.. அது அப்படி ஒரு சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் குடும்பத்துக்கு 80 லட்சம் ஓட்டு. விளையாட்டுக்கு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எப்போதும் அதிமுக துணையாக இருப்பதுபோல் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டு இருந்தார்.

இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து, அதிமுக ஆட்சியில் கோரிக்கைகள் எடுத்து வந்தபோது எங்களை சந்திக்காத எடப்பாடி, இப்போ திடீர் பாசம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டபோது, எடப்பாடி கீழ்த்தரமாக பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், ஓட்டு போடாததால் அரசு ஊழியர்கள், ஆசியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள் என்று சாபம் விடும் வகையில் மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிசாவசன் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் பேசும்போது குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெறமுடியும். கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். இதற்கு கூட்டத்தில் இருந்த மற்றொரு நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ குறுக்கிட்டு, சேவியர் மனோகரன் குமரி மாவட்டத்தின் எதார்த்தத்தை பற்றி பேசியுள்ளார் என்றார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல், அடிதடி | Clashes scuffles at AIADMK  field inspection meeting - kamadenu tamil

தொடர்ந்து எஸ்.பி.வேணுமணி பேசுகையில், ‘அதிமுக நமது குடும்பம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றார். எஸ்.பி.வேலுமணி பேசி கொண்டிருந்தபோது, மண்டப வளாகத்தின் கார் நிறுத்தும் பகுதியில் அதிமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்தனர். குமரி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி பூசல் இருந்து வரும் நிலையில், ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகனை முன்னாள் அமைச்சர் வேலுமணி தான் தங்கிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து பேசியுள்ளார். இதுபோல் சில நிர்வாகிகளையும் அழைத்து பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *