புதுடெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரத்தால் அமித்ஷா பதவி விலகக் கோரியும், மன்னிப்பு கேட்கக் கோரியும் நாடாளுமன்ற அவைகளில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் இரு அவைகளும் முடங்கின. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது. இதில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் நிறைவாக நேற்று முன்தினம் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘இன்று அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது பேஷனாகி விட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என முழங்குபவர்கள், அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால், 7 பிறவிகளுக்கும் சொர்க்கத்தை அடையலாம்’’ என கடுமையாக விமர்சித்தார். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு நேற்று வந்த இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டு முன்பாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, இடதுசாரிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் ஒன்றுகூடி, கையில் அம்பேத்கர் படத்தை ஏந்திய படி, ‘அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கோஷமிட்டனர். இந்த விவகாரம், நாடாளுமன்றத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கூடியதும், காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், அரசியலமைப்பு மீதான விவாதத்தின் போது அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து பல காங்கிரஸ் எம்பிக்கள் ‘அம்பேத்கரின் அவமதிப்பை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என முழக்கமிட்டனர்.
இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித்ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘அமித்ஷாவின் பேச்சில் சிறிய பகுதியை மட்டும் எடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை எப்படியெல்லாம் அவமதித்தது என்பதைத் தான் அமைச்சர் அமித்ஷா விளக்கினார். எனவே முழு வீடியோவை பாருங்கள். பாஜவை பொறுத்த வரை அம்பேத்கர் கடவுளுக்கு சமமானவர். அம்பேத்கரை மக்களவை எம்பியாக விடாமல் சதித்திட்டம் தீட்டியது காங்கிரஸ்.
1990 வரையிலும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கவில்லை’’ என்றார். எதிர்க்கட்சி எம்பிக்கள், அமித்ஷாவுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தனர். இந்த அமளியால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மக்களவையிலும் அமித்ஷா மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘ஜெய் பீம்’ என கோஷமிட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகலுக்குப் பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அமித்ஷாவின் பேச்சை கண்டித்து அவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் விதி 187ன் கீழ் மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீசை கொண்டு வந்தார்.