சென்னை: ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் தொடர்பாக தொழிலாளர் நலச்சங்கத்தினர் உடன் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். புதிய மீட்டர் கட்டணம் , ஆட்டோ டாக்ஸி செயலி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. 25 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; ஆட்டோ சங்கத்தினர் அவர்களின் கோரிக்கையை கூறியுள்ளனர்.
கோரிக்கைகளை பரிசீலித்து சென்னை நகர ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பான கும்தா மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களுக்கு என அரசு சார்பில் செயலி உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பைக் டாக்சிகளை முறைப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.