ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை தாலிபான் அரசு தெரிவிக்கவில்லை.
குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போலியோ நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் போலியோ நோய் தற்போதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
போலியோ நோயை தடுக்க அந்நாடுகளில் சொட்டு மருத்து முகாம்கள் நடத்த ஐ.நா. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், போலியோ சொட்டு மருந்து மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட சதி என ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பெரும்பாலானோர் கருதி வருகின்றனர். மேலும், குழந்தை பிறப்பை தடுக்கவே இந்த மருந்து கொடுக்கப்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.
இதனால், பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி முகாம்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடப்பு மாதத்திற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்னும் சில நாட்களில் ஐ.நா. அமைப்பால் தொடங்கப்பட இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அந்நாட்டை ஆளும் தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.