இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அநுர குமார திசநாயக அவர்களுக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த் சூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயக 55.89% வாக்குகளுடன் வெற்றி பெற்றதை அடுத்து அவர், ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் தேவை என்ற முழக்கத்துடன் அதிபராகியுள்ளார். அதிபராக பதவியேற்ற அவரது கரத்தில் புத்த மத பிக்குகள் கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். புதிய அதிபரின் கீழ் 15 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய அவர்,”பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்,”எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் வசம் இலங்கை நாட்டின் அதிகாரம் சென்றுள்ளதால் இலங்கை – இந்தியா உறவு என்னவாகும்? கொள்கை ரீதியாக சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பாரா அநுர குமார திஸநாயக? சீனா ஆதிக்கம் செலுத்துவதால் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பாரா அநுர? இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவாரா? என கேள்வி பல எழுந்துள்ளன.