சென்னை :பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம்.
அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய தலைவராகவும் இருந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண் ஒருவர் வீட்டின் முன்பு குடிபோதையில் டாக்டர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சுப்பையா ணியிட மாற்றம் செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி இலந்த்ரேயன் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில், “செவிலியர் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுப்பையா ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை. அவருக்கு எதிரான புகாரின் மீது நடத்திய விசாரணையின் அறிக்கையை விசாகாக்குழு தாக்கல் செய்ய வேண்டும், “என்று வாதிடப்பட்டது.
அதே சமயம் அரசு தரப்பில், “சுப்பையாவிற்கு எதிராக இது போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட கூடாது. பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது,”என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.