உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் ஏ.ஐ தொழில்நுட்ப வசதிகளுடன் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகித்து வருகிறது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது, ‘‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.
குறிப்பாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் சுமார் 37 ஆயிரம் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது பிற மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக தமிழில் மொழிப் பெயர்க்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தி, அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி உள்ளிட்ட 22 மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற விசாரணையின் போது மின்னணு உச்ச நீதிமன்ற அறிக்கை அதாவது (இ-எஸ்.சி.ஆர்) மூலம் பெறப்படும் தீர்ப்புகளின் மேற்கோள்களை வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். அவை வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு ஆதரவாக இருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியுடன் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
இ-எஸ்சிஆர் எனப்படும் உச்ச நீதிமன்றத்தின் டிஜிட்டல் பதிப்பு மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஏ.ஐ தொழில்நுட்ப வசதிகளுடன் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் மொழிதான் தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இது பெருமைப்படும் விதமாக உள்ளது” என்று தெரிவித்தார்.