மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் டானா புயலாக வலுவடைகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருமவழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அதன் காரணமாக வட தமிழகத்தில் அனேக இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறும் போது ஏற்கனவே புயல் பட்டியலில் உள்ள பெயர்களின் வரிசைப் படி ‘டானா’ என்று பெயரிடப்படும்.
இந்த டானா புயல் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 24-ம் தேதி காலை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.