உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீப காலமாக மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்பாக போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் இரண்டு சட்டத்திருத்த மசோதாக்களை, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது.
ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடாக உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுகிறார்கள். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா மற்றும் ஊராட்சிகள் சட்டத்திருத்த மசோதா என இரு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும்.