புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா டிச.16-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஒன்றிய  சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Union Cabinet has approved 'One Nation One Election' | ஒரே நாடு ஒரே தேர்தல்  மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இதில்  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா டிச.16-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் சிங் இது குறித்து கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையின் கீழ் தேர்தல் நடத்டப்பட்டு அதில் ஒரு மாநில அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். தேர்தல் விதிமுறையின்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டதால் அடுத்த 4.5 ஆண்டுகள் அந்த மாநிலம் அரசாக்கமே இல்லாமல் இருக்க வேண்டுமா? முன்பெல்லாம் மாநில அரசுகள் முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும், ஆனால் இப்போதைய அரசியல் சூழலில் 2.5 ஆண்டுகளிலேயே பிரச்சினைகள் வந்துவிடுகின்றன. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் நமக்கு சாத்தியப்படாது” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *