சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதா நாட்டை பிளவுபடுத்தும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா சொத்துக்களை நிர்வகிப்பது பற்றியது மட்டுமே தவிர, மதத்திற்கு சம்மந்தமில்லை என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
காரசாரமான விவாதம் இரவு வரை பரபரப்பாக நீடித்த நிலையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பரிந்துரைப்படி மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்:
12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது