டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கனடா நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. அதனால் தனது பதவியை கடந்த மாதம் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். தொடர்ந்து, புதிய பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் பொருளாதார நிபுணரான மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த 14ம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

House of Commons of Canada - Wikipedia

பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆன நிலையில், அவர் நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மார்க் கார்னி, ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று சூளுரைத்தார். கனடா நாட்டில் மொத்தமுள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

தற்போது ஆளும் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கான எதிர்ப்பு காரணமாக கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல், இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் உள்ளிட்டவை தேர்தல் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளதால் கனடா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *