வாஷிங்டன்: கமலா ஹாரிசுடன் மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தோல்வி பயத்தில் டொனால்ட் டிரம்ப் பின்வாங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகின்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன் உடல்நலக்குறைவால் போட்டியில் இருந்து விலகிய நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதையடுத்து கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே நேரடி விவாதம் கடந்த 10ம் தேதி நடந்தது. இதில் ஜோ பைடன், கமலா ஹாரிசின் ஆட்சியை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதேபோல் கடந்த 4 ஆண்டு ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தம், எதிர்க்கால திட்டங்களை விவரித்த கமலா ஹாரிஸ், டிரம்பின் செயல்பாடுகள் குறித்து விளாசினார்.
இந்த விவாதம் முடிந்த நிலையில் உடனடியாக 2வது விவாதத்துக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். இதனை டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். டிரம்ப் ட்ரூத் எனும் சமூக வலைதள பக்கத்தில், ‘‘மூன்றாவது விவாதம் இருக்காது” என்று பதிவிட்டு இருந்தார். குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ஜான் தூனே உட்பட பலர் டிரம்ப் மீண்டும் ஹாரிசுக்கு எதிரான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரசார இமெயில் ஆகஸ்ட் 10ம் தேதி ஹேக் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஈரான் தான் இந்த ஹேக் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை கிரிமினல் குற்றச்சாட்டுக்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றச்சாட்டுக்கள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும் யார் மீது குற்றம்சாட்டப்படும் என்பது தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.