புதுடெல்லி: காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 போலீசாருக்கு ரயில்வே அபராதம் விதித்து உள்ளது. காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே பல்வேறு இடங்களில் கடந்த ஒன்றரை மாதங்களில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பிரயாக்ராஜ் ரயில்வே பிரிவு அபராதம் விதித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனைகள் மேற்கொண்ட போது ஏசி பெட்டிகள் மற்றும் பேண்ட்ரி கார்களில் டிக்கெட் இல்லாமல் போலீசார் பயணிப்பதை பார்த்து அபராதம் விதித்து உள்ளனர். இதுபற்றி வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஷி காந்த் திரிபாதி கூறுகையில், ’டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி ரயில்வேக்கு நிதி இழப்பையும் ஏற்படுத்துகின்றனர்.
பல போலீஸ்காரர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ பதவியை தவறாகப் பயன்படுத்துகின்றனர். குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் நுழைந்து காலி பெர்த்தில் படுத்துக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பயணிகளுக்கான பெர்த்களை கூட காலி செய்வதில்லை. மேலும் ரயில்வே அதிகாரிகளையும் அச்சுறுத்துகிறார்கள். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.