டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களை மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
வாழவேண்டுமானால் அச்சமின்றி வாழ வேண்டும். உண்மை, அன்பு, கருணை, நல்லிணக்கம் ஆகியவற்றின் பாதையில் அனைவரையும் இணைத்து நடக்க வேண்டும் என்பதை தேசப்பிதா எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
காந்திஜி ஒரு சாதாரண நபர் அல்ல, நம் வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையை வழிநடத்தும் தேசப்பிதா.தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.