கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 154 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவ காளியாட்ட திருவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு வைத்திருந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் 154 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீக்காயம் அடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கன்ஹாங்காடு மாவட்ட மருத்துவமனை, அரிமலா மருத்துவமனை, மிம்ஸ் கண்ணூர், மிம்ஸ் கோழிக்கோடு. கே.ஏ.ஹெச். செருவாத்தூர், மன்சூர் மருத்துவமனை, ஏ.ஜெ. மெடிக்கல் காலேஜ் மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்து ஏற்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் திருவிழாவில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான கோவில் நிர்வாக தலைவர், செயலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.