2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, லடாக் உள்ளிட்ட பனிப் பகுதிகளில் 2026 அக்டோபர் 1ம் தேதியும், நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி 2ம் கட்டமாகவும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை கடந்த 2019ல் ஒப்புதல் வழங்கியது. அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படாததால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்தன. மேலும், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி தீவிர பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பொழிவு பகுதிகளில் அக்டோபர் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும்.
சுதந்திரத்திற்கு முன்பு 1931ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டன. எனவே தற்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரி தரவுகள் 1931ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. தற்போது முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.