டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் தானம் செய்யப்படுகிறது. சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அவரது குடும்பத்தினர் தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72), சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்சனையால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சீதாராம் யெச்சூரிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு பொதுவுடமை இயக்கத் தலைவர்களையும், தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1952ல் சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட யெச்சூரி, ஆந்திரா, டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்தார். அந்த காலகட்டத்தில் மாணவர் தலைவராக விளங்கினார்.
1975 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சீதாராம் யெச்சூரி, எமர்ஜென்சி காலகட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து கைதானார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ராஜ்யசபா எம்.பி யாக பதவி வகித்தார் சீதாராம் யெச்சூரி.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கி உள்ளனர். டெல்லியில் உள்ள சிபிஐஎம் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்குக் பிறகு, சீதாராம் யெச்சூரியின் உடல் அவரது விருப்பப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்துக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும்.
இறுதிக் காலத்தில் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கே அவரது உடல் தானமாக வழங்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்கு இன்றி, சீதாராம் யெச்சூரியின் உடல், அறிவியலுக்காக தானம் செய்யப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது என்பதை மறுக்க முடியாது.