சென்னை – போடி ரயில் தடம் புரண்ட விவகாரத்தில் மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர்களிடம் 4 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம், போடிக்கு சேலம், கரூர், மதுரை வழியாக வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.10 மணிக்கு வந்து 7.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

சென்னை சென்ட்ரல் - போடி ரயில் மதுரையில் தடம் புரண்டது

கடந்த 30ம் தேதி இரவு 10.30 மணியளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார இன்ஜினுடன் புறப்பட்ட போடி ரயில் நேற்று முன்தினம் (அக்.31) காலை 7 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்திற்கு வந்தடைந்தது. இங்கிருந்து, போடி செல்வதற்காக மின்சார இன்ஜின் கழற்றப்பட்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. பின்னர், காலை 7.36 மணியளவில் 5வது பிளாட்பாரத்தில் இருந்து ரயில் போடிக்கு புறப்பட்டது. அப்போது, ரயில் இன்ஜினுக்கு அடுத்துள்ள ரயில் மேலாளர் அறையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான 2ம் வகுப்பு பெட்டியில் ஒரு சக்கரம் திடீரென தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் போன்ற எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, தடம் புரண்ட ரயில் பெட்டி கழற்றப்பட்டு தனியாக நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில் மற்ற பெட்டிகளுடன் சுமார் 2 மணிநேரம் தாமதமாக காலை 9.25 மணிக்கு போடிக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை – போடி ரயில் மதுரை ரயில் நிலையத்தில் வைத்து மின்சார இன்ஜின் கழற்றப்பட்டு, டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு செல்வது வழக்கம். அதற்காக இன்ஜினை மாற்றியபோது பெட்டிகள் நகராமல் இருக்க தடுப்புக்கட்டை வைக்கப்பட்டது.

இன்ஜின் மாற்றி பொருத்திய பின்னர் வைக்கப்பட்ட கட்டை அகற்றப்படாமல் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பெட்டியில் இருந்து சக்கரம் தடம் புரண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தடுப்பு கட்டைகள் எடுக்க தவறிய ஊழியர்களிடம் நேற்று காலை சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் கட்டையை அகற்றுவதற்குள் ரயில் இயக்கப்பட்டது என்று பைலட் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

இதேபோல் ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததால் கட்டை அகற்றப்படவில்லை என பைலட் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பில் விசாரணை நடத்தி உரிய அறிக்கையை உயர் அதிகாரிகளான டிஆர்எம் மற்றும் சென்னை ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளது. அவர்களது பரிந்துரைப்படி, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது’’, என்றனர்.

ரயில் தடம்புரண்டு விபத்து... சக்கரம் கழன்று தடம் புரண்டதாக தகவல் - Kumudam  - News | Magazines

மேலும், போடி ரயில் தடம் புரண்டது குறித்து மதுரை ரயில்வே தலைமை நிலைய அதிகாரி, உதவி கோட்ட பொறியாளர், உதவி கோட்ட மேலாளர், உதவி மென்பொறியாளர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் விசாரித்து ஒன்றிய ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *