கொழும்பு: தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. மேலும், அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 28ம் தேதி இலங்கையின் டல்ப்ட்ட தீவுக்கருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒன்றிய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும இருநாடுகளிடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இலங்கையின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் தொடர்பு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ச நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இருநாட்டு மீனவர்களும் ஒருவரது கடல் எல்லைக்குள் அடிக்கடி அத்து மீறி நுழைந்து கைது செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க இலங்கையின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்து மீறி நுழைபவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.