சென்னை: தமிழுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்; தமிழ்நாடு தன்னோட உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஒன்றிய பாஜக அரசின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்கள் பெரிதும் பாதிக்கும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம் -இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானாவில் இருந்து நமக்கான ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அதுக்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்துட்டு இருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறார்கள்.
மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். தமிழ்நாட்டின் நலனுக்காக யாருக்கும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த முறை, என்னோட பிறந்தநாள் வேண்டுகோளாக, அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நான் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவது இல்லை. மும்மொழி கொள்கையை ஏற்காததால் நமக்கான நிதி கொடுக்கவில்லை. மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பாஜக அரசின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.