சென்னை: ‘தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – 2024’ல் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகள், தேசிய போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்த பரிசுத் தொகை ₹25 கோடி உட்பட ₹50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் இந்தாண்டு நடத்தப்பட இருக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை தனது முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
2024 தொடரில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுஊழியர்கள் என 5 பிரிவுகளாக 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர் – அக்டோபரில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம். வழக்கமான ரொக்கப் பரிசுகளுடன், இந்தாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதன் முறையாக 4ம் இடம் பெறுபவர்க்கும் 3ம் பரிசுக்கு இணையாக பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ₹37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. முன்பதிவுக்கு ஆக.25ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு எஸ்டிஏடி மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையம்: 9514 000 777.