திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசிய பேச்சை அனைவரும் அறிவோம். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவர் பேசியதை சுருக்கி சொல்ல வேண்டும் என்றால், அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு அழகல்ல. பாஜவின் எந்த மாதிரியான பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. எல்லா தேர்தல்களிலும் மக்கள் திமுகவின் பின்னால் நிற்கிறார்கள். இதை புரிந்துகொள்ள முடியாமல், ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இவர்கள் பேசுவதை பார்த்து எங்களுக்கு எதற்கு பயம்? இவர்களைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய மொழிகளின் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். இந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருதம் மொழியை கொண்டு வருவார்கள். எத்தனை முறை மோடி தமிழகம் வந்தாரோ அத்தனை வாக்கு வித்தியாசம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்தது.
தற்போது எத்தனை முறை அமித்ஷா தமிழகம் வருகிறாரோ அத்தனை வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை. கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறன் எங்கள் முதல்வருக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.