கோயம்புத்தூர்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை; எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காதில் பூ சுற்றிக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு கோவிந்தா! தமிழ் மக்களுக்கு கோவிந்தா! என பஜனை பாடல்கள் பாடியில் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், தமிழ்நாட்டில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு என்ற சொல் ஒரு இடத்தில் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் ஒன்று பட்ஜெட்டில் மேற்கோள்காட்டப்படும். அதுவும் இந்த முறை இடம் பெறவில்லை.
கேரள காங்கிரஸ் சம்பவம் தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை; தமிழ்நாடு அரசு முன்வைத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதற்கு பதிலடியாக மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லியில் தமிழ்நாடு எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடும் இந்தியாவில்தானே இருக்கு என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசைக் கண்டித்து திமுக, இடதுசாரிகள், மதிமுக, விசிக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.