ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வௌியேறிய பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர்.
இதையடுத்து தலிபான் அரசு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முதலில் 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க தடை விதித்த தலிபான் அரசு பெண்கள் பல்கலை கழகங்களில் சேரவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியில் 14 லட்சம் ஆப்கான் சிறுமிகளின் கல்வி தடைபட்டிருப்பதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ வௌியிட்ட அறிக்கையில், “ தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு ஆரம்ப கல்விக்கான அணுகல் குறைந்துள்ளது. கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை கடந்த 2023 ஏப்ரலில் அதன் முந்தைய எண்ணிக்கையில் இருந்து 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
கல்விக்கான தடைகள் அறிமுகப்படுத்தும் முன்பே பள்ளிக்கு வராத சிறுமிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் ஆப்கானில் 25 லட்சம் பெண்கள் கல்விக்கான உரிமையை இழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.