திருமலை: திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலியாகினர். பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்தது.

Read all Latest Updates on and about Tirumala Tirupathi Devasthanam Temple

இந்நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருக்கும் டோக்கன்களை வாங்க நேற்று மதியம் முதலே கவுன்டர்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேரம் கடந்து செல்ல செல்ல முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நுழைய முயன்றதால் கவுன்டர்கள் முன்பு கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வந்திருப்பது பக்தர்கள் என்பதால் தடியடி நடத்தவோ கடுமையாக நடந்து கொள்ளவோ இயலாது என்பதால் சமாளித்து வரிசையில் போலீசார் அனுப்பினர்.

ஆனால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்த நிலையில் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்தனர். சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க திரண்ட பக்தர்களில் 6 பேர் நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *