லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவியது. லாஸ்ஏஞ்சல்சின் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு தீ உலக புகழ்பெற்ற ஜெ.பால் கெட்டி அருங்காட்சியகம், கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் அதிகாரி ராபர்ட் லூனா கூறுகையில், காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தீயில் சிக்கி சேதமடைந்த குடியிருப்புகள் பகுதிகளில் யாராவது சிக்கி உள்ளனரா என மோப்ப நாய்கள் உதவியுடன் தேடி வருகிறோம். காட்டு தீக்கு பலியானோர் எண்ணிக்கை உயருக்கூடும் என தெரிவித்தார். காட்டு தீயினால் 145 சதுர கிமீ பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளன. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்பட 12,000 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.