துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு,” துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர்.
குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் மிக மிக அத்தியாவசியமான வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உள்ளது ஆனால் அரசியல் சாசன கேள்விகள் எழக்கூடிய இந்த முக்கியமான வழக்கில் அவசர அவசரமாக விடுமுறை கால அமர்வானது இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி சேர்ந்த வழக்கறிஞர் கொடுத்திருந்த இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவை பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு தன்னுடைய வாதங்களை நியாயமான விஷயங்களை எடுத்து வைக்கும் வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை கால அமர்வானது தன்னுடைய பணி நேரத்தை தாண்டி மாலை 6:30 மணி வரை சம்மந்தப்பட்ட மனுவை விசாரித்து அவசர அவசரமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்கள் பல உண்மைக்கு மாறானவையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக உரிய விளக்கங்கள் அளிக்கவும், அரசு தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் கூறியபோதும் அதற்கான உரிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவில்லை மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்யவும் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது, இந்த இடைக்கால உத்தரவால் துணைவேந்தர் நியமனம் மேலும் தாமதமாகும். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.