சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். இது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு விழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வந்தார். இது அதிமுகவில் பெரும் இது சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். எடப்பாடியை சந்தித்த அமித்ஷா, செங்கோட்டையனையும் தனியாக சந்திக்க காரணம் என்ன? என்பதுதான் கேள்வியாக இருந்து வந்தது. இந்த சந்திப்பு அதிமுகவில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் நேற்று அதிகாலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய செங்கோட்டையன், சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சென்னையில் இருந்து செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக கூறி தூத்துக்குடிக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி பாஜ தலைமை பேசிய போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்து கொள்ள முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை சில நிர்வாகிகள் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
செங்கோட்டையன்தான் சரி. இதனால் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்ற நிர்வாகிகளுக்கு இருக்கிறது. செங்கோட்டையன் எல்லோரையும் அரவணைத்து செல்வார், அதிர்ந்து கூட பேச மாட்டார். எனவே ஒன்றிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பு கொள்ளாத நிலையில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.