வாடிப்பட்டி: ‘மாநில தலைவர் பதவியை தக்க வைக்க போராடும் அண்ணாமலை தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’ என ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சத்தமாக பேசுவதால், அவர் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது.
இதுவரை தமிழ்நாட்டிற்கு அவர் என்ன செய்துள்ளார்? தேர்தலின் போது எட்டு முறை பிரதமரை பிரசாரத்திற்கு அழைத்து வந்த அண்ணாமலை, தமிழ்நாடு வெள்ள பேரிடரில் சிக்கியபோது பிரதமரை ஏன் அழைத்து வரவில்லை. வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட, அங்கு புதிதாக பதவி ஏற்ற இணை அமைச்சர் சுரேஷ்கோபி பிரதமரை அழைத்துச் சென்றார். ஆனால், இதுவரை தமிழக மக்களுக்காக எப்போதாவது பிரதமரை அண்ணாமலை அழைத்து வந்துள்ளாரா?.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பினாரா? மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினாரா?. ரயில்வே திட்டங்களில் நிதி ரத்தானதற்கு கேள்வி எழுப்பினாரா?. நீங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் என்று, மூச்சு விடாமல் பேசினால் அதெல்லாம் உண்மையாகிவிடாது. நீங்கள் பாஜ மாநில தலைவராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நியமனப் பதவியை வைத்துக் கொண்டு, அதனை தக்கவைக்க எல்லா தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது எந்த முறையில் நியாயம்?.
நீங்கள் தலைவராக இருக்கும் மூன்றாண்டுகளில் எத்தனை தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? அண்ணாமலை முதலில் நாவடக்கத்தை, பணிவை கற்றுக்கொள்ள வேண்டும். மாநில தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி, எத்தனை தொழிற்சாலை கொண்டு வந்திருக்கிறேன் என்று அவரால் கூற முடியுமா? உங்களுடைய நேரம், உழைப்பு, அறிவாற்றல், செல்வாக்கு, தொலைநோக்கு சிந்தனையை தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவழிக்க வேண்டும். அதைவிடுத்து அவரை அழிப்பேன், இவரை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு நீங்கள் என்ன எமதர்மராஜாவா? தனிநபர் விமர்சனத்திற்கு அண்ணாமலை தயார் என்றால், நாங்களும் தயார். நாங்கள் மதுரை தமிழில் பேச ஆரம்பித்தால், இப்போதைய கூவம் போல் நாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.