திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஊராட்சிமன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனுவில், பட்டியலினத்தவர் ஒருவர் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப்பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பெண்ணுக்கு 4 வாரங்களில் ஒதுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒதுக்கீடு செய்த பின் தேர்தல் நடத்தி புதிய ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கவும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.