இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 24ம் தேதிநாடு தழுவிய போராட்டத்துக்கு கடந்த 13ம் தேதி அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
பொதுமக்களை காரணமின்றி கைது செய்தல், 26வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கட்சி தொண்டர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி சென்றனர். அப்போது போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சியினருக்கும் மோதல் வெடித்தது. பல போலீசார் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 70 பேர் காயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் தாக்கியதில் 3500 தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர்.