பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் நேற்று முன்தினம்(25ம் தேதி) கடைப்பிடிக்கப்பட்து. இதையொட்டி ஐநா பெண்கள் மற்றும் ஐநா போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பான யுஎன்டிஓசி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் சராசரியாக 51,000 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்துக்கு அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் காரணமாக அமைந்துள்ளனர். நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2022ம் ஆண்டில் 48,000 பெண்கள் அல்லது குழந்தைகள் தங்கள் இணையர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்கள் பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வௌியிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள், குழந்தைகள் இந்த தீவிரமான பாலின வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எந்த இடமும் விதிவிலக்கல்ல. குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடுகள்தான். கடந்தாண்டு நடந்த இந்த படுகொலைகளில் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டனர் . அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 1 லட்சம் பெண்களில் 1.6 பெண்கள், ஓசியானியாவில் 1 லட்சம் பெண்களில் 1.5 பெண்கள், ஆசியாவில் 1 லட்சம் பெண்களில் 0.8 பெண்கள் மற்றும் ஐரோப்பாவில் 1 லட்சம் பெண்களில் 0.6 பெண்கள் என கணிசமாக குறைவாக உள்ளது” என அதிர்ச்சி தகவல் வௌியிடப்பட்டுள்ளது.