மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. நள்ளிரவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 128 எம்.பி.க்களும். எதிராக 95 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் புதிய சட்டம் அமலுக்கு வரும். கடந்த 1995ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டில் மக்களவையில் தாக்கல் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்று சர்ச்சை கிளம்பியது. பின்னர், மசோதாவில் சில மாற்றங்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு செய்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்பு திருத்த மசோதா 2025-ஐ நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தார்.

விவாதத்தில் பங்கேற்று பேசிய ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘இந்த சட்டத்தினால் கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்கள் பயன் அடைவார்கள். இது எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்காது. வக்பு சொத்துக்களில் இந்த சட்டம் தலையிடாது. பிரதமர் மோடியின் அரசு சப்கா சாத் மற்றும் சப்கா விகாஸ் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகின்றது. இது எந்த சமூகத்திற்கும் எதிராக பாகுபாடு காட்டாது.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது” என்றார். பின்னர் நடந்த நள்ளிரவு நடந்த வாக்கெடுப்பில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேறியதாக அதிகாலை 2.30 மணிக்கு அவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
* வரலாற்று சிறப்பு மிக்க நாள்
மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களுக்கு பின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ்தள பதிவில் ‘‘இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள், நாடாளுமன்றம் வக்பு திருத்த மசோதா 2025க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது பல ஆண்டு அநீதி மற்றும் ஊழலின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நீதி மற்றும் சமத்துவத்தின் சகாப்தத்தை அறிமுகப்படுத்துகின்றது.
கோடிக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கும் இந்த முக்கியமான மசோதாவிற்கு பிரதமர் மோடி மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்ற குறிப்பிட்டுள்ளார்.