உபி மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. பண்டைய காலத்தில் அந்த இடத்தில் இந்து கோயி்ல் ஒன்று இருந்ததாக கூறி விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மசூதியை ஆய்வு செய்ய, வக்கீல் கமிஷனர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்றுகாலை ஜமா மசூதிக்கு வந்தனர்.
அவர்கள் ஆய்வு பணியை தொடங்கியதும் ஏராளமானோர் மசூதி அருகே குவிந்தனர். அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அப்போது ஒரு கும்பல் சரமாரியாக கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டது.வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சிலர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசும் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோதல்களில் 3 பேர் கொல்லப்பட்டனர்.