பாம்பன் பாலம் திறப்பு விழா முடிந்து நாளை டெல்லி திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓபிஎஸ், டிடிவி தினகரன், வாசன், அண்ணாமலை உட்பட 40 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று இரவு வரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் நேரம் முடிவு செய்யப்படவில்லை என்ற பரபரப்பு அதிமுக மற்றும் பாஜ நிர்வாகிகளிடம் உள்ளது.
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை நாளை, பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வருகிறார். அங்கிருந்து பாம்பன் செல்கிறார். புதிய ரயில்பாலத்தை திறந்து வைத்து விட்டு, அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தங்கம் தென்னரசு, உள்ளூர் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி, விழாவை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 3.50 மணிக்கு வருகிறார்.
இங்கிருந்து மாலை 4 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதன் முடிவில் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை வரிசைப்படுத்தி, உரிய அனுமதி சீட்டுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிரதமரை சந்திப்போர் பட்டியலில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், அண்ணாமலை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பட்டியலில் இடம்பெறவில்லை. நேற்று இரவு வரை எடப்பாடி பழனிசாமி, மோடியை சந்திக்க அனுமதி கேட்கவில்லை.
ஆனால் பாஜ தரப்பில் இருந்து பிரதமர் மோடியை எப்படியாவது எடப்பாடி சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இருவர் சந்திப்பு உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மோடியை சந்திக்கும்போது, இருவரையும் சேர்த்து வைக்க மோடி நடவடிக்கை எடுக்கலாம். அதை தவிர்க்கவே மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இரு அணியின் தொண்டர்கள் விமானநிலையத்தில் திரண்டால் தேவையில்லாத பிரச்னை உருவாகலாம். இதை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி மதுரை செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரதமர் வருகையால் மதுரை விமான நிலையத்தை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன், பிரதமரின் தனி சிறப்பு பாதுகாப்பு படையினரும், தமிழக காவல்துறை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு, அதி விரைவு படையினர் இப்பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுடன் அவசர சிகிச்சைக்கான மருத்துவர் குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.