சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, முதல்வர் செயல்படுத்தியுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம், முதல்வரின சீரிய திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளான 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.
அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர். மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.