Indian Prime Minister Manmohan Singh waves to the crowd during an election campaign in Kolkata, India, Saturday, April 23, 2011. The Congress party and Trinamool Congress party are allies in the ongoing six-phased elections for the state of West Bengal. (AP Photo/Bikas Das)

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘‘மன்மோகன் சிங்கின் மறைவு நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல்வேறு அரசு பதவிகளை வகித்த அவர், இந்திய பொருளாதாரத்தை சீர்த்திருத்துவதில் பெரும் பங்காற்றி உள்ளார். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள், அவரது மனிதநேயம், களங்கமற்ற அரசியல் வாழ்க்கை என்றென்றும் நினைவுகூறப்படும்’’ என்றார்.

Former PM Manmohan Singh, the quiet force behind India's economic revival,  dies at age 91 - BusinessToday

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இரங்கல் செய்தியில், ‘‘மகத்தான பொருளாதார சீர்த்திருத்தத்துடன் நமது தேசத்தை தைரியமாக வழிநடத்தினார் மன்மோகன் சிங். வளர்ச்சி மற்றும் செழுமைக்கான புதிய பாதைகளைத் திறந்தார். அவரது பாரம்பரியம் பாரதத்தின் வளர்ச்சிப் பாதைக்கு என்றென்றும் வழிகாட்டும்’’ என்றார்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘‘விவேகமும் பணிவும் கொண்ட தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டதற்காக நாடு வருந்துகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளிலும் பணியாற்றினார். பல ஆண்டுகளாக பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் நுண்ணறிவு கொண்டவை. பிரதமராக அவர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்’’ என கூறி உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், ‘‘நான் எனது வழிகாட்டியை இழந்து விட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் மன்மோகன் சிங்கை நினைவு கூர்வோம்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவரையும், ஈடுஇணையற்ற பொருளாதார நிபுணரையும் இந்த நாடு இழந்து விட்டது’’ என்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, நிதியமைச்சராக, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது’’ என்றார்.

திமுக எம்பி தயாநிதி மாறன் தனது இரங்கல் செய்தியில், ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளுள் ஒருவருமான மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. நம்பமுடியாத கருணை மற்றும் பச்சாதாபம் கொண்ட உறுதியான தலைவர், பொருளாதார நிபுணர், அறிஞர் மற்றும் முன்னாள் பிரதமர் என அவரது இணையற்ற பங்களிப்புகள் நமது தேசத்தின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. மன்மோகன் சிங்கின் பணிவு, ஞானம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய மன்மோகன் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதோடு, காங்கிரஸ் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிற வகையில் அந்தந்த பகுதிகளில் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. தனது அறிவுத்திறனால், கடின உழைப்பால், அனைவரையும் அரவணைக்கும் பண்பால் தொடர்ந்து 2 முறை பாரதப் பிரதமராக நாட்டை வழி நடத்திய பெருமை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு உண்டு. இவ்வாறு பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

தலைவர் கலைஞர், மன்மோகன் சிங் உடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்.

நெருக்கடியான காலங்களிலும் மன்மோகன் சிங், தலைவர் கலைஞர் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணை புரிந்தது. இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திமுக சார்பாகவும் மன்மோகன் சிங் இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார். மன்மோகன்சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்! இந்திய பொருளாதாரத்தை முன்-பின் என்று குறிப்பிடும் அளவுக்கு மாற்றியமைத்தவர் மன்மோகன்சிங்; முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்துக்கும், மதிப்புக்கும் உரியவர் மன்மோகன் சிங்.

ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ள இரங்கல் செய்தில்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார் மன்மோகன் சிங்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது; மன்மோகன் சிங் குறைவாக பேசினாலும் நாட்டின் வளர்ச்சிக்காக அதிகமாக பணியாற்றியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *