மெய்டீ அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மணிப்பூரில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்டீ, பழங்குடியின குக்கி இனத்தவர்களுக்கு இடையே கடந்த 2023ல் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பாஜ தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2023 வன்முறையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக மெய்டீ இனத்தின் அரம்பாய் தெங்கோல் அமைப்பின் தலைவர் கனன் சிங் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இம்பால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
கனன் சிங் கைதான தகவல் பரவியதைத் தொடர்ந்து, மீண்டும் வன்முறை வெடித்தது. கனன் சிங்கை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள் குவாகீதெல் மற்றும் உரிபோக்கில் சாலைகளில் டயர்கள் மற்றும் பழைய பொருட்களை எரித்தனர். இம்பாலில் பல பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குராய் லாம்லாங்கில் ஒரு கும்பல் பேருந்துக்கு தீ வைத்தது.
இம்பால் விமான நிலைய நுழைவாயிலையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கைதான கனன் சிங்கை மணிப்பூரை விட்டு வெளியில் கொண்டு செல்வதை தடுக்க அவர்கள் விமான நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பாதைகளையும் அடைத்தனர். சில இளைஞர்கள் கும்பலாக தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். ஆளுநர் மாளிகையில் இருந்து 200 மீ தொலைவில் உள்ள காங்லா கேட் முன்பு குவிந்த போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ராஜ்பவனுக்கு செல்லும் சாலைகளில் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் பதற்றம் நீடித்ததால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இந்த 5 மாவட்டங்களிலும் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில், சனிக்கிழமை இரவு 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 3 பேர் காயமடைந்திருப்பதாகவும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.