கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இளம் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக, இன்று (அக்.1) மேற்கு வங்க இளம் மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் இன்றிலிருந்து முழுமையாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும், மருத்துவமனைகளில் அச்சமற்ற பணிச் சூழல் குறித்தும் அரசு தரப்பிலிருந்து தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.