பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யாவின் கசான் நகரத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உலகளாவிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், ஊக்குவித்தல் போன்ற பிரச்சனைகளில் உரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கிய தளமாக பிரிக்ஸ் நாடுகளுக்குள் இருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.
கசான் பயணமானது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய அமைதியின்மையை அடுத்து இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.