வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 2025 மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாநிலங்கவையில 128 உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “பாரபட்சமான, நியாயமற்ற திருத்தங்களுடன் பாஜ அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
மேலும், இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். இந்த திருத்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை அமைதி வழியில், ஜனநாயக ரீதியான அனைத்து போராட்டங்களும் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.