வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிறப்பு விமானங்கள் மூலம் டாக்காவில் இருந்து 400 இந்தியர்கள் கொல்கத்தா அழைத்து வரப்பட்டனர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது.
ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. விரைவில் பொதுத்தேர்தல் நடத்த ஏதுவாக அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அதுவரையிலும் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி முகமது சஹாபுதீன், மாணவர் அமைப்பு தலைவர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், முப்படைகளின் தளபதிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்கள் கோரிக்கைப்படி நோபல் பரிசு வென்றவரும் பொருளாதார நிபுணருமான முகமது யூனுஸை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐரோப்பாவில் உள்ள யூனுஸ் இன்று டாக்கா வருகிறார்.
இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க இருப்பதாக ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் நேற்று அறிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘இடைக்கால அரசு பதவியேற்பு விழா 8ம் தேதி (இன்று) இரவு 8 மணிக்கு நடைபெறும். அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி வகிப்பார். ஆலோசனை குழுவில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பார்கள்’’ என்றார்.
இடைக்கால அரசுக்கு பொறுப்பேற்க உள்ள நிலையில் மாணவர்களும் வங்கதேச மக்களும் அமைதி காக்க வேண்டுமென முகமது யூனுஸ் நேற்று வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே, கலவரம் காரணமாக வங்கதேசத்திற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை நேற்று இயக்கின.
அவற்றின் மூலம் சுமார் 400 பேர் கொல்கத்தா திரும்பினர். தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் வழக்கமான விமான சேவைகள் நேற்றிலிருந்து தொடங்கப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போல, டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் அவசியமற்ற பணியாளர்கள் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா திரும்பிய இந்தியர்கள் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘‘சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் பார்த்த காட்சிகளை நம்பவே முடியவில்லை. விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறோம். இப்போது நிலைமை ஓரளவுக்கு சீராகி உள்ளது’’ என்றனர். வங்கதேசத்தில் 9,000 இந்திய மாணவர்கள் உட்பட 19,000 இந்தியர்கள் தங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்பி விட்டதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.