வியட்நாமில் புயலை தொடர்ந்து கனமழையில் பாலம் இடிந்து விழுந்தது, பஸ் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய ‘யாகி’ புயல் கடந்த சனிக்கிழமையன்று வியட்நாமை தாக்கியது.
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன்கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர மாகாண பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் புதோ மாகாணத்தில் பாலம்இடிந்து விழுந்தது. இதில்,10 கார்கள், லாரிகள்,2 பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகனங்களில் பயணித்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் மாயமாகியுள்ளனர். காவ் பாங் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் அருகில் உள்ள ஆற்றில் விழுந்தது.
ஆற்று வெள்ளத்தில் பஸ் அடித்து செல்லப்பட்டது. ஆனால் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளதால் மீட்பு பயடையினரால் அங்கு செல்ல முடியவில்லை. சாபா என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். யாகி புயல் மற்றும் அதற்கு பின் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆகியுள்ளது. மேலும் இந்த புயல், கனமழை காரணமாக 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.