ஜார்ஜ்டவுன்: கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளது.
கயானாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நம் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பலரை சந்தித்து பேசினார். உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட், பேட்ஸ்மேன் ஆல்வின் காளிச்சரண், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷு உள்ளிட்ட பல வீரர்களை சந்தித்த மோடி, அவர்களது கிரிக்கெட் அனுபவங்களை உற்சாகமாக கேட்டு தெரிந்து கொண்டார்.
மோடியை சந்தித்த பின் நிருபர்களை சந்தித்த லாயிட் கூறுகையில், ‘கயானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதில் மோடி ஆர்வமாக உள்ளார்’ என்றார். கடந்த 50 ஆண்டுகளில் கயானா செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. கரீபிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தியா – கரீகோம் உச்சி மாநாட்டிற்கு மோடி தலைமை வகித்து பேசினார். இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து, மாநாட்டில் பேசப்பட்டது.