ஊழல் வழக்கில்,முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜேத் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டத்தினால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அந்த நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஹசீனாவுக்கு எதிராக படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்,டாக்காவுக்கு அருகில் உள்ள பூர்பாச்சல் என்ற இடத்தில்,முறைகேடான வழிகளில் குடியிருப்பு நிலங்களை வாங்கியதாக ஹசீனா, அவரது மகள் சைமா வாஜேத் புதுல் மற்றும் 17 பேர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் குற்றம் சாட்டியது.
இதில் ஹசீனா, சைமா வாஜேத் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. இதை ஏற்று கொண்ட டாக்கா மெட்ரோபாலிட்டன் சிறப்பு நீதிபதி ஜாகீர் உசைன் கலிப் இரண்டு பேருக்கும் எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார்.