மாஸ்கோ: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்க முயன்ற போது, தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் 38 பயணிகள் பலியாகினர். 29 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பறவை மோதியதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் செசென்யா மாகாணத்தின் குரோஸ்னி நகரை நோக்கி பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 5 ஊழியர்கள் உட்பட 67 பேர் பயணித்தனர்.

Azerbaijan Airlines plane crashes in Kazakhstan, killing 38 people – The Irish Times

 

 

குரோஸ்னி நகரில் கடும் பனி மூட்டம் இருந்ததால் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. அக்தாவ் விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், விமானம் பலமுறை வானில் வட்டமடித்தபடி இருந்தது. அந்த சமயத்தில், விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பி உள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் கட்டுபாட்டை இழந்து வானில் இருந்து மிக வேகமாக கீழே இறங்கி தரையில் மோதி வெடித்து சிதறியது. குண்டுவெடித்தது போன்ற பெரும் தீப்பிழம்புடன் கரும் புகை எழுந்தது.

இதில் விமானத்தின் பெரும் பகுதி தீப்பிடித்தது. உடனடியாக 150 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின் 29 பயணிகள் மீட்கப்பட்டிருப்பதாக கஜகஸ்தான் அவசரகால அமைச்சகம் தகவல் தெரிவித்தது. ஆனாலும் இந்த எண்ணிக்கை இறுதியானது இல்லை என கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், படுகாயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் உடனடியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்தில் 38 பயணிகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 4 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்திருப்பதால் சடலங்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதோடு, பலியானவர்களின் எண்ணிக்கையும் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் இறந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

Watch: Azerbaijan Airlines plane hits ground, bursts into flames in Kazakhstan | World News - The Indian Express

 

முதற்கட்ட விசாரணையில், பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி, அதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ரஷ்ய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த கஜகஸ்தான், அஜர்பைஜான் நாடுகள் நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளன. இந்த விசாரணையில் அஜர்பைஜான் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கஜகஸ்தான் கூறி உள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. விமானத்தில், அஜர்பைஜானை சேர்ந்த 37 பேர், ரஷ்யாவை சேர்ந்த 16 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 6 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் பயணித்ததாக விமான நிறுவனம் பயணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இதற்கிடையே, விமானம் வானில் இருந்து செங்குத்தாக கீழே இறங்கி தரையில் மோதி வெடித்துச் சிதறும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. மேலும், விபத்தில் இருந்து தப்பிய பயணி ஒருவர் விமானத்திற்குள் இருந்தபடி எடுத்ததாகவும் சில வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இவற்றை வைத்தும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தனது ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *