தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஸ்பெயின் முழு ஆதரவு அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுடன் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழுவின் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது.

Kanimozhi-led delegation pays tribute to Mahatma Gandhi's statue in Spain

பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் பூஜ்ஜிய சகிப்பின்மை நிலைப்பாடு குறித்து 33 உலக நாடுகளிடம் விளக்க அனைத்து கட்சி எம்பிக்களைக் கொண்ட 7 குழுக்களை ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழுவில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா நாடுகளைத் தொடர்ந்து, சுற்றுப்பயணத்தின் நிறைவாக ஸ்பெயின் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றடைந்தது.

தலைநகர் மாட்ரிட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு கனிமொழி எம்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தீவிரவாதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட 4,800க்கும் மேற்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் தன்னார்வ அமைப்புடன் கனிமொழி குழுவினர் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது தீவிரவாதத்தால் ஏற்பட்ட வலி, மீள்தன்மை குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

எல்லை தாண்டிய அச்சுறுதல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் அனுபவத்தையும் பிரதிநிதிகள் குழு பகிர்ந்து கொண்டது. அதைத்தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டு எம்பிக்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்பின்மை குறித்து விளக்கினர். ஸ்பெயின் வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை சந்தித்து பேசிய கனிமொழி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஸ்பெயினின் இந்திய குழுவின் நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக, அரவணைப்பு மற்றும் அன்பால் நிறைந்த தமிழ் சமூகத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய்நாட்டை விட்டு வெகு தொலைவில் வசிக்கும் பல இந்தியர்களுடன் இணைவது மிகவும் அருமையாக இருந்தது’’ என்றார். இக்குழுவின் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மனுவேல் அப்லரேஸ் உடனான சந்திப்பு நேற்று நடந்தது. இதில், தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் இந்தியாவின் முயற்சிகள் குறித்து கனிமொழி தலைமையிலான பிரதிநிதிகள் விளக்கினர்.
இதற்கு இந்தியாவின் முயற்சிகளுக்கு ஸ்பெயினின் புரிதலையும், தெளிவான ஆதரவையும் வெளியுறவு அமைச்சர் அல்பரேஸ் வழங்கினார். மேலும் உலகளாவிய அமைதியின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்திய அவர் தீவிரவாதாம் ஒருபோதும் வெல்லாது என்றும் இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஸ்பெயின் துணை நிற்கிறது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியதாக இந்திய தூதரக எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயினுடன் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *